Saturday, January 3, 2015

குருவே போற்றி


 குருவே போற்றி 

அலையலையாய் அடுத்தடுத்து
துன்பம் வரினும் அலைகடல்மேல்
அரிதுயில் கொண்டுள்ள அரங்கனை
தன் அகத்துள்ளே வைத்து பூஜிக்கும்
அடியவர்களை அவைகள்  என்ன செய்யும்?

அதிகாலையில் துயில் நீக்கி
தூயஉள்ளத்துடன் தூமணி மாடக்
கோயிலுக்கு சென்று ஆண்டாளின்
பாசுரங்களை சேவிப்போருக்கும்
செவிமடுப்போருக்கும் கிடைக்காமல்
போகுமோ ஆனந்தம் ?

சங்கரா சங்கரா என்று சதா காலமும்
உச்சரிப்போர் வாழ்வில் சங்கடங்கள்
என்று ஏதேனும் உண்டாமோ?

சரவணபவ சரவணபவ என்ற முருகப்பெருமானின்
நாமம் உட்கொண்டவர் மனதில் சஞ்சலங்கள்
குழப்பங்கள் குடியேற இயலுமோ?

அன்னை பராசக்தியின் திருவடியை எக்காலமும்
சிந்தித்திருப்போரை இவ்வுலக ஆசா பாசங்கள்
ஆட்டி வைக்குமோ?

தெய்வத்தின் எவ்வடிவை வணங்கினாலும்
உத்தம சத்குருவின் வடிவத்தை வணங்கி
அவரின் ஆசி பெறாது போயின் யாது பயன்?

தெய்வங்களே பாரினில் அவதாரம்
எடுத்தபோது குருவிடம்தான் கல்வி கற்றன
வாழ்ந்த காலம் முழுவதும் குருவை போற்றி
புகழ்ந்தன என்பதை மறவாதீர் .

ஆதியிலே மவுன குருவாய் வந்தான்
ஆல மரத்தடியில் ஆலகாலம் உண்ட
தென்காசி நாதன்

அடுத்து பாற்க் க்கடலிருந்து பாருக்கு வந்தான்
பரமபதநாதன்

பாரதப் போர் இடையே பார்த்தனுக்கு
நம்மை போன்றோருக்கும் சம்சார போரை
வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வழியை உபதேசித்தான்
பகவத் கீதை கண்ணன் என்ற திருநாமம் கொண்டு
ஜகத் குருவாக

அடுத்தடுத்து ஆயிரமாயிரம் இறையடியார்கள்
இவ்வுலகம் வந்த்கொண்டே இருக்கிறார்கள்
அஞ்ஞானத்தில் சிக்கி உழலும் நமக்கெல்லாம்
அறிவுரைகளை தந்து கொண்டே இருக்கிறார்கள்.

அவற்றில் கவனம் செலுத்துவோம் .அவர்கள்
சொல்லிய செய்திகளின் உட்பொருளை சிந்திப்போம்
சிறப்பான வாழ்க்கை வாழ்வோம்.
குருவை போற்றுவீர் .


No comments:

Post a Comment