Tuesday, January 13, 2015

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(30)

   

  ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(30)

பாடல்-30
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
     திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
     பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
     இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
விளக்கம் 

இந்த புனிதமான பாரத மண்ணில்
மானிடராக  பிறப்பது எதற்காக ?



மானிடர் என்று
பெயர் வந்து எதற்க்காக?

இடர் என்றால் துன்பம்
என்று அனைவருக்கும் தெரியும்
மானிடர் என்றால் மிகப் பெரும் துன்பம்

ஒரு ஜீவன்  தாயின் வயிற்றில்
கருவாய் உருவாகி
வளர்ந்து குழந்தையாக உருவெடுத்து
இப்புவிக்கு வந்து வளர்ந்து வாழ்ந்து
மீண்டும் மண்ணுக்குள் போகும் வரை
ஒவ்வொரு கணமும் ஆபத்துக்கள் அதை எந்நேரமும்
தொடர்ந்து கொண்டே இருகின்றன.

உயிர்கள் மீது அபரிமிதமான
கருணை கொண்ட
ஹரி இதயத்தில் வந்து அமர்ந்து கொண்டு
 நம்மை அறியாமலேயே
நம்மைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறான்
என்பதை உணர்ந்த ஞானிகளும் யோகிகளும்
அவனை எப்போதும் அவனை



அந்தர்யாமியாய்  கண்டு மகிழ்ந்து
துதித்துக் கொண்டு இன்புறுகிறார்கள்.

அவனை தன்னுள் கண்டுகொண்ட
காரணத்தினால் அவன் எல்லா ஜீவராசிகளிலும் அண்ட
சராசரம் முழுவதிலும் வியாபித்து இருப்பதை உணர்ந்து கொண்டு அனைத்திலும் அவனைக் கண்டு ஆனந்தமுறுகிரார்கள்

அதனால்தான் சர்வ ஜீவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி என்று சொல்கிறார்கள்

விஷ்ணு சஹஸ்ரநாமமும் அனைத்து உயிரிலும் வாசம் செய்யும் வாசுதேவனே உனக்கு நமஸ்காரம் என்கிறது.




அந்த ஆனந்தம் அவர்களின் முகத்தில்
தெய்வீக பு ன்னகையாய்
 மலர்வதை நாம் காண முடியும்



துன்பங்களும் துயரங்களும்
மாறி மாறி கடலலைகள் போல் வாழ்வில்
வருவதால் இந்த பிறவியை பிறவிக் கடல்
என்று அழைக்கப்படுகிறது.

இந்த கடல்தான்
அனைத்திற்கும் தாயாவாள்.

பிரளயத்தின் போது இந்த உலகமனைத்தும்
கடலில்தான் மூழ்குகின்றன .



மீண்டும் அதிலிருந்துதான் தோன்றுகின்றன .
ஏராளமான தோன்றிய பொருட்களிடையே நம்மையெல்லாம் பகவானோடு இருந்துகொண்டு காக்கும்
செல்வத்திற்கு அதிபதியான மகா லக்ஷ்மியும்
 கடலிருந்துதான் தோன்றினாள்



எப்படி பாலைக் காய்ச்சி ஆறவைத்து
புரை  ஊற்றி தயிராக்கி அதில் வெண்ணையை கடைந்து எடுத்து அதிலிருந்து நெய்யைஅடைகிறோமோ

அதுபோல்தீய மற்றும் நல்ல எண்ணங்களைக் கொண்ட நம் மனதை பகவானின் நாமத்தின் துணைக் கொண்டு கடைந்தால் நம் இதயத்தில் அடியில் நமக்காக காத்திருக்கும் கண்ணன் வெளிவந்து நமக்கு காட்சி தருவான்.

 அவன் காட்சியைக் கண்ட பின் நமக்கு
வேண்டியதெல்லாம் அவன் தருவான்.
அதை பெற்று அவன் நினைவுடனே அவன் தாள் பணிந்துகொண்டு  இந்த உலகில் இன்பமாக வாழ்ந்து முடிவில்
அவன் திருவடிகளை அடையலாம்



பரமனை அடைய வழிகாட்டும்
பாமாலை 30 யும் அனுதினமும் அரங்கனோடு கலந்து  அவனோடு நின்றுகொண்டு நமக்கு காட்சி தரும் ஆண்டாளின் திருவடிகளை சிந்தித்து வாழ்க்கையை நடத்தினால் நாமும் இன்புற்று இந்த உலகமும் இன்புறும் என்பது சத்தியம்.

மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளின் கருணையினால் அரங்கனின் புகழ் பாடி பரமானந்தத்தில் திளைத்த நாம் அதை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால் ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்து நீராடி தூய மனதுடன் அவள் நமக்களித்த பாமாலையைப்  பாடி பரமனின் பாதங்களில் பூமாலையை அர்ச்சித்து அவனின்  நினைவாக நம் கடமைகளை தொடங்கினோமானால் புவியில் நாம் வாழும் காலம் வரை  இன்பமான, அமைதியான, வாழ்வை நாம் அடைவோம் என்பதில் ஐயமில்லை

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் .
திருவரங்கன் திருவடிகளே சரணம்

1 comment:

  1. மானிடர் விளக்கம் மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete