Sunday, December 21, 2014

ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(7)

  ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(7)








கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.




அதிகாலையில் எழுபவர்களுக்கு 
வெவ்வேறுவிதமான பறவைகள் 
வெவ்வேறுவிதமாக ஒலிழுப்புவதை கேட்கலாம்.

இரவு முழுதும் தாய்ப் பறவையோடு இணைந்திருந்த பறவைக் குஞ்சுகள்
பொழுது விடிந்ததும் செல்லும் தாயைப் பிரிய மனமில்லாமல் கீசு கீசு .என்று கத்துகின்றன

ஆனால் மனிதர்களாகிய நாமோ இறைவனிடமிருந்து பிரிந்து இந்த உலக மாயையில் சிக்கிக்கொண்டு விட்டோம். இறைவனோடு இயைந்து இருந்த காலத்தில் துன்பம் இல்லை ,துயரம் இல்லை, கவலைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை அதனால் ஏமாற்றங்கள் இல்லை.பயம் இல்லை. மீண்டும் அந்த உன்னதமான நிலையை அடையவேண்டுமானால். நாம் உண்மையான பக்தியோடு இறைவனை நினைத்து வணங்க வேண்டும்.

இன்று ஆயர்பாடியும் இல்லை தயிர் கடையும் கோபியர்களும் இல்லை. ஆனால் இவ்வுலகில் அவதரித்தபோது இருந்த இயற்கை சூழலும் தற்போது இல்லை, இருந்தும் நாம் அதிகாலையில் எழுந்து கண்ணனை வணங்கி  அவன் அருள் பெறுவதற்கு தடை ஏதும் இல்லை.



இன்று பகவானின் லீலைகளை பற்றி பேச கேட்க எத்தனையோ சாதனங்கள் 
வந்துவிட்டன.கலி காலத்தில் இறையுணர்வில் திளைக்க நல்லதோர் வாய்ப்பு இருப்பதை  நாம் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு நல்ல கதியை அடைய நம் மனதை செலுத்த வேண்டும். 

பாலைச் காய்ச்சி புரை ஊற்றி தயிராக்கி 
கடைந்தால்தான் வெண்ணை வரும்.
வெண்ணையிலிருந்து நெய் கிடைக்கும்.
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் 
கடைந்தபின்தான் அவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது 
மனிதர்களையும் தெய்வங்களையும் 
ஆட்டி படைப்பது மூன்று குணங்கள்தான்.
ஒரு சத்வ குணம்,இரண்டாவது ரஜோ குணம்,
மூன்றாவது தமோ குணம்.
இந்த மூன்றையும் முக்குறும்புகள் என்பர் 
இந்த மூன்றையும் கடந்தால்தான் 
பரம்பொருளை அடையமுடியும்.
இந்த மூன்றில் நம்மை இறைவனை 
அடையமுடியாதபடி செய்வதில் முதலில் 
நிற்பது தமோ குணமே
உறக்கம் தமோ குணத்தின் பார்ப்பட்டது.
அதிலும் மார்கழி போன்ற குளிர் காலத்தில் 
உறக்கத்தை  விட்டு எழுந்திருக்க மனம் வராது. 
நன்றாக போர்த்திக்கொண்டு உறங்கத்தான் 
மனம் செல்லும்.
மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், 
நல்ல எண்ணங்களையும் 
பகுத்து ஆராய்ந்து தீயவை நீக்கி நல்ல எண்ணங்களை 
வளர்த்துக்கொண்டால்தான் மனம் இறைவனை நோக்கி செல்லும்.
அதற்க்கு நல்ல சத்சங்கம் வேண்டும் 
தினமும்  அதிகாலையில் எழுந்து நீராடி 
நெற்றியில் சாற்றிக்கொண்டு கோயிலுக்கு 
சென்று கண்ணனை தரிசிக்கவேண்டும் என்று
கடந்த ஆறு நாட்களாக பழகியும் 
ஏழாவது நாளன்று உறக்கத்திலிருந்து 
எழ மனம் ஒப்பவில்லை.
நம்மை தமோ குணமான உறக்கத்திலிருந்து 
விடுபட சொல்கிறாள் ஆண்டாள். 
நம்மை குரு ஸ்தானத்திலிருந்து
 நமக்கு கண்ணனின் மகிமைகளை எடுத்துக் கூறி 
அவனை சென்று வணங்க வருமாறு அன்போடு அழைக்கிறாள்.


பெண்ணே என்றழைக்காமல் பேய்ப்பெண்ணே 
என்று அழைக்க காரணம் பேய்கள் இரவெல்லாம் சுற்றிவிட்டு 
அதிகாலையில் உறங்கப் போய்விடும்.
அதே போல் மனித மனம் விழித்திருக்கும்  
நேரமெல்லாம் இறைவன் சிந்தனையின்றி 
உலக விஷயங்களை பற்றி அலைந்து திரிந்து விட்டு களைத்துப்போய் 
அதிகாலையில் எழும்போது முதல் நாள் விட்ட காரியங்களை
செய்ய தொடங்கிவிடும்.
அது அவ்வாறு செய்வதற்குள்  அதை இறைவனின் 
திருவடிகளில் திருப்பவேண்டும் என்பதே 
இந்த பாசுரத்தின் பொருளாகக் கொள்ளவேண்டும். 

No comments:

Post a Comment