Thursday, January 9, 2014

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(29)



அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(29)



பாடல்-29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்துன் 
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில்  பிறந்து நீ குற்றவேல் 
எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்  உந்தன்னோடு 
உற்றோமே ஆவோம் உனக்கேதான் ஆட்செய்வோம் 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் 


விளக்கம் 

மார்கழி மாதத்தின் தொடக்கத்தில்
 நாம் அனைவரும் உலக மோகத்தில் மயங்கி
 கிடந்து உறக்கத்தில் கிடந்தோம்.

தன் குழந்தைகள் இப்படி அறியாமையில் 
கிடந்தது உழல்கிரார்களே என்று கவலைப்பட்டு
 நம்மையெல்லாம் கடைதேற்ற பூமிதேவியே 
 மழலையாய் மண் மீது வந்துதித்தாள்

 .மாலவனே அனைவருக்கும் மேலானவன் 
 என்று இவ்வுலகில் நிலை நாட்டி 



அவனைப்  பணிவதே பிறவி எடுத்ததின்பணி 
 என்று மாலுக்கு மலர் மாலைகளை சாற்றியும் 
அவன் மீது பாமாலை சாற்றியும் 
முதலும்  முடிவும் இல்லாத பரந்தாமனுக்கு 
பல்லாண்டு பாடி தன் வாழ்வை 
கண்ணனுக்கே அர்ப்பணித்த பெரியாழ்வாரின் 
 வளர்ப்பு மகளாக வளர்ந்தாள்
 


இவ்வுலகில் பிறவி எடுத்ததின் நோக்கம் அழியும் பொருட்களைச் சேர்ப்பதிலேயே வாழ்நாளை கழிப்பது அல்ல  என்றும் அழியாப் பரம்பொருளான ஹரியை நினைந்து அவன் புகழ் பாடி துதித்து அவனுடன் அயிக்கியமாவதுதான் என்ற பேருண்மையை வலியுறுத்தினாள் ஆண்டாள் 

  மற்ற பெண்கள் போல் இல்லாமல் 
ஜீவான்மாவின் இலக்கு பரமாத்மாதான் 
என்று வாழ்ந்து காட்டினாள்.

 முடிவில் அரங்கனுடன் அனைவரும் 
முன்பாக கலக்கவும் செய்தாள்.



அத்தோடு விடவில்லை 
பெரியாழ்வார் பரமனுக்காக  
தொடுத்த மாலைகளை தான் அணிந்து கொண்டு பக்திக்கு ஆட்பட்ட பக்தைக்கும்  பரமனுக்கும் பேதம் இல்லை என்று இவ்வுலகத்திற்கு காட்டினாள் ஆண்டாள் 



  .அவள் பக்தியை மெச்சிய அரங்கன் அவள் சூடிக் கொடுத்த மாலைகளை அன்போடு ஏற்றுக்கொண்டதோடு சூடி கொடுத்த சுடர்க்கொடி என்று அவளைப் பாராட்டி அவளையும் ஏற்றுக்கொண்டான்.



  பரமன் மீது வேதத்தின் சாரத்தை பாமரரும் அறியும் வண்ணம்  30  பாமாலைகளாக 
சூட்டி மகிழ்ந்தாள் அந்த பக்தை  கோதை. 

28 பாசுரங்களை பாடி மகிழ்ந்தோம்.
 நம் மனம் கண்ணன் திருவடிகளின் 
கருணையை நினைத்து நினைத்து பரவசப்படுகிறது.

 ஆனால் நமக்கு இந்த உலகத்தில் விதி வசத்தால் பல காரியங்களை காலையில் கண் விழித்தது  முதல் உறங்கப் போகும் வரை ஆற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 
இறைவனுக்கும் அது தெரியும். 

அதனால்தான் ஆதவன் உதயம் ஆனவுடன் நன்னீராடி அவன் சன்னதியில் போய்  நின்று அவனைக் கண்ணார கண்டு அவன் புகழைப் போற்றிப்  பாடி >தங்க நிறம் போன்று ஒளி வீசும் தாமரை போன்ற பாதங்களை சேவித்து கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு விட்டுஅவன் அருள் பெற்றுக்கொண்டு  உலக கடமைகளை ஆற்றப் புகுந்துள்ளோம்.  



எங்களுக்கு கல்வியறிவு கிடையாது>
பக்தி கிடையாது

மாடுகள் போல் மேய்ப்ப்பாரின்றி 
திரியும் எண்ணங்கள் உடைய 
 மனம் கொண்டவர்கள்  நாங்கள் .

அப்படிப்பட்ட இடையர்கள் குலத்தில் 
 வந்துதித்த கண்ணா ! எங்களின் உண்மையான பக்தியை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.

இந்தப் பிறவி மட்டுமல்லாது 
அடுத்தடுத்து வரும் பிறவிகளிலும்
 உன் திருவடியைத் தான் எங்கள் ஜீவன் பற்றாகக் கொள்ளவேண்டும்

 .உனக்குத்தான் தொண்டாற்றவேண்டும் 
.அதற்க்கெதிரான  சிந்தனைகளை எங்கள் மனதில் எழாதவாறு நீதான் அவைகளை  அழித்து எங்களை காப்பாற்றவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறோம். 



இந்த பாக்கியத்தை நமக்களித்த 
ஆண்டாளின் திருவடிகளைச் சிந்தித்து 




அதிகாலையில் அனுதினமும் வணங்கினாலே போதும்
 அரங்கனின் அருள் நமக்கெல்லாம் எளிதாகக் கிட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.  

படங்கள்-கூகிள்


5 comments:

  1. சிறப்பான வேண்டுதல் + விளக்கம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆஹா, அடடா, அதற்குள் இன்னொரு பதிவா?

    அனைத்துப்படங்களும் அருமையோ அருமை, அண்ணா.

    //பரமனுக்காக தொடுத்த மாலைகளை தான் அணிந்து கொண்டு பக்திக்கு ஆட்பட்ட பக்தைக்கும் பரமனுக்கும் பேதம் இல்லை என்று இவ்வுலகத்திற்கு காட்டினாள் ஆண்டாள் //

    ஆண்டாள் அணிந்த மாலைகளை மட்டுமே பரமனும் விரும்பி ஏற்றார்.

    அது தான் ஆண்டாளுக்கும் மற்றவாளுக்கும் உள்ள வித்தியாசம். ;)

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK

      16 பாசுரங்களுக்கு விளக்கம்
      இவனை எழுத வைத்தான் அந்த பரமன்

      அடுத்து விழுந்தது அடி.எழுந்து உட்காரவும்,
      நிற்கவும் முடியாத நிலை வந்துவிட்டது.

      வல்லானைக் கொன்றானை மாற்றாரை
      மாற்றழிக்க வல்லானை
      யானைக்கு அருள் செய்தானை
      புகழ் பாடும் கண்ணனைபற்றி
      இனி எப்படி எழுத முடியும்
      என்று நினைக்கத் தோன்றியது.

      இனி எங்கே மீதமுள்ள பாசுரங்களுக்கு
      விளக்கம் எழுதாமல் நின்றுவிடுமோ
      என்று எண்ணினேன்


      ஆனந்த வாசுதேவன் நம்பிக்கை தந்தார்.
      உள்ளிருக்கும் வாசுதேவனும் ஒத்துழைத்தார்.

      ஆண்டாள் என் உள்ளத்தை ஆண்டவள்

      இவனை எழுந்து உட்கார வைத்து
      29 பாசுரங்களுக்கு இவன் உள்ளத்தில்
      விளக்கம் தந்து எழுதவைத்து விட்டாள்.

      இன்னும் ஒன்றுதான் .
      அதையும் அவளே பூர்த்தி செய்து வைப்பாள்
      .
      இந்த புதுமையான முயற்சிக்கு காரணம்
      அவள் அருளேயன்றி.
      இவன் முயற்சி ஒன்றும் இல்லை.

      Delete
  3. தொடரின் பகுதி-107 க்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தங்களை உடனே வருகை தரும்படி அழைக்கிறார்கள். ;)

    ReplyDelete
    Replies
    1. இவன் வாயைக் கிளறி ஏதாவது உளற வைப்பதில் உமக்கு என்ன ஆசை ஐயா?உதிர்த்துவிட்டேன் முத்துக்களை உங்கள் வலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கே

      Delete