Wednesday, November 14, 2012

விக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-2)


விக்கினவர்த்தனன்' 

இரட்டைப் பிள்ளையார் (Part-2)




இதற்கு விநாயக புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.

'காலரூபி' என்னும் ஒரு கொடிய சிருஷ்டி 
ஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்டுவிட்டது. 
அதை அசுரன் என்பதா, அல்லது அரக்கன் என்பதா?
அதெல்லாம் அவன் இல்லை. அவன் அவனேதான்

இயற்கையின் அமைப்பில் என்னென்ன வகையான 
இடையூறுகள், தடங்கல்கள், தடைகள், இடைஞ்சல்கள்,
 கெடுதல்கள், விக்கினங்கள் எல்லாம் இருக்கின்றவோ 
அத்தனை வடிவிலும் அந்த காலரூபி தோன்றி 
அவற்றைச் செய்தான். ஆகையினால் 
அவனுக்கு 'விக்கினன்' என்ற பெயரும் ஏற்பட்டது. 
வசிஷ்டர் முதலிய ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க 
விநாயகப்பெருமான் அவனை அடக்குவதாக வாக்களித்தார்.
முதலில் தன்னுடைய அங்குசத்தை ஏவி, 
காலரூபியைப் பிடித்துவரச் செய்தார். 
ஆனால் அவனோ யுகப்பிரளயமாக மாறிச் சுழன்று 
எல்லாவற்றையும் மூழ்கடித்தான். 
அதெல்லாம் விநாயகர் முன்னிலையில் எடுபடவில்லை. 
அதன்பின்னர் அவனால் முடிந்தமட்டும் 
விதம் விதமாகப் போரிட்டுப்பார்த்தான். 
    

முடிவில் விநாயகர், ஒரு வேலாயுதத்தை 
அவன்மீது ஏவினார். 
அதனுடைய ஆற்றல்
தாங்காது காலரூபி,

விநாயகரிடமே சரணடைந்தான்.



விக்னராஜன்
விக்னவிநாயகர்

          அப்போது அவன், "கருணாமுர்த்தியே! என்னுடைய அபசாரங்களையெல்லாம் மன்னித்து என்னையும் உங்களின் அடியானாக ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று கெஞ்சினான். 
          
விநாயகர், "இனி நீ என் பக்தர்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாது. என்னை வணங்காதவர்களையும் நினைக்காதவர்களையும், எனக்கு அபசாரம் செய்பவர்களையும் நீ உன்னுடைய இயல்பின்படி பல விக்கினங்களின் வடிவெடுத்து நீ பீடித்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார். 
         

விக்கினன் இன்னுமொரு வரத்தையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான்
"தங்களுடைய திருப்பெயருடன் என்னுடைய பெயரையும் 
சேர்த்து வழங்கி யருள வேண்டும்".
         

 விநாயகர் அவ்வாறே தனக்கு 'விக்கினராஜன்' என்றும் 'விக்கினேஸ்வரன்' என்றும் பெயரைச் சூட்டிக் கொண்டார். விக்கினஹரன், விக்கினநாசனன், விக்கினகரன், விக்கினகிருது, விக்கினவர்த்தனன் என்பவை யெல்லாம் காரணப்பெயர்களாக ஏற்பட்டன.
          இன்னும் கொஞ்சம் விசித்திரமான தகவல்கள் உள்ளன..... 

    இரட்டைப்பிள்ளையார்



          விநாயகரின் இரண்டுதன்மைகளையும் பிரதிபலிக்கும்வகையில் மூர்த்தங்களை நிறுவி அந்தப்பண்டைய சைவர்கள் வணங்கினார்கள். இந்த வழக்கம், காணாபத்தியம்(கணபதி வழிபாடு) என்பது தனியரு சமயமாகத் திகழ்ந்த காலத்திலிருந்து வந்திருக்கலாம்.
 
         மேலும் பழஞ்சைவத்தில் ஆகமத்தாந்திரீகக்கூறுகள் மிக அதிகமாக இருந்தன. அவற்றிற்கும் முற்பட்ட சில கூறுகளும் இருந்தன. அவற்றில் பெரும்பகுதி இப்போது கிடையாது. 

          காணாபத்தியம் சைவத்தில் கலந்தபோது அந்தக்கூறுகளில் சில சைவத்துள்ளும் வந்துசேர்ந்தன. 
          விநாயகரை விக்கினகரனாகவும் விக்கினஹரனாகவும் வழிபடும் வழக்கம் பழமையானதுதான். இருவகைப்பிள்ளையார்களையும் தனித்தனியாக வணக்குவதோடு சிற்சில இடங்களில் சேர்த்தும் வணங்கியுள்ளனர்.

          
அப்படிபட்ட சிற்சில இடங்களில் ஒன்றுதான் மீனாட்சியம்மன் சன்னிதியின் வாயிலின் தென்புற மேடை.
         அந்த இரட்டைப் பிள்ளையார்களில் ஒன்று விக்கினஹரன்; இன்னொன்று விக்கினகரன்.
         

சிவாலயங்களில் விநாயகர் சன்னிதி தென்மேற்கு மூலையில் நிறுவப்படும்.அங்கு கிழக்குப்பார்த்தாற்போல விநாயகர் அமர்ந்திருப்பார். அவர் விகேஸ்வரன், விக்னஹரன்.
         

அதே தென்மேற்கு மூலையில் வடக்குப்பார்த்தாற்போல சில மூர்த்தங்கள் இருக்கும். அவை சப்தமாத்ரிகா என்னும் பிராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி,  வாரஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர். அவர்களுடன் லட்சுமிக்கு மூத்தவளாகிய ஜ்யேஷ்டா தேவி தன்னுடைய புதல்வி, புதல்வனுடன் அமர்ந்திருப்பாள். அந்த இடத்திலும் ஒரு விநாயகர் மூர்த்தம் இருக்கும். அவர் விக்கினகரன். 
          
இந்த அமைப்பை மிகவும் பழமையான சிவாலங்களில் மட்டுமே காணலாம்.மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னிதியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் இருக்கின்றது. மிகச்சுத்தமாகப் பார்க்கவேண்டுமானால் சிவகங்கை மாவட்டத்து திருப்புத்தூரில் உள்ள திருத்தளீசுவரர் ஆலயத்துக்குச் செல்லவேண்டும். பிரான்மலை திருக்கொடுங்குன்றீசர் கோயிலிலும் உண்டு.
         

 நன்மை நடக்கவேண்டும் என்று நினக்கும் அதே வேளையில் கெடுதல் நடக்காமல் இருக்கவும் வேண்டினர். கெடுதலைத் தடுப்பதற்கும் தெய்வங்களை வழிபட்டனர். கெடுதலைக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் தெய்வங்களை வழிபட்டனர். 

(இன்னும் வரும்) 

நன்றி 
தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html


2 comments:

  1. இவை எல்லாம் அரிய தகவல்கள்... நன்றி...

    தொடர்கிறேன்...

    ReplyDelete